search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பேருந்துகள்"

    • அரசுப் பேருந்துகள் பராமரிப்பின்றி மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இயக்கப்படுவது குறித்து கடந்த ஏப்ரல் 25-ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
    • 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து வடரங்கம் என்ற கிராமத்தை நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான நகரப் பேருந்தில் சக்கரம் பனங்காட்டாங்குடி என்ற இடத்தில் கழன்று சாலையில் ஓடியது. முன்புற சக்கரம் இல்லாமல் தடுமாறிய நகரப் பேருந்தை அதன் ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு நிறுத்தியதால், அதில் பயணம் செய்த 25-க்கும் மேற்பட்ட பயணியர் தப்பினார்கள். சக்கரம் தனியாக கழன்று ஓடும் நிலையில் மிகவும் அலட்சியமாக அரசுப் பேருந்துகள் பராமரிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகள் பழுதடைவதும், விபத்துகளில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 24-ஆம் தேதி திருச்சியில் திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப்பட்டார். அதற்கு முன் பிப்ரவரி 6-ஆம் தேதி சென்னை அமைந்தகரை பகுதியில் மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.

    அரசுப் பேருந்துகள் பராமரிப்பின்றி மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இயக்கப்படுவது குறித்து கடந்த ஏப்ரல் 25-ஆம் நாள் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 26-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகள் போர்க்கால அடிப்படையில் பழுது பார்க்கப்பட்டதாகவும், அரசு பேருந்துகளில் இருந்து 17,459 பழுதுகள் கண்டறியப்பட்ட நிலையில் மே 4-ஆம் தேதி வரை 13,529 பழுதுகள் சரி செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள பழுதுகள் மே 6-ஆம் தேதிக்குள் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் அறிவித்திருந்தன. ஆனால், அதன்பின் 10 நாட்கள் கூட ஆகாத நிலையில், அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடுகிறது என்றால் அரசுப் பேருந்துகள் பெயரளவில் தான் பழுது நீக்கப்பட்டனவா? என்ற வினா எழுகிறது.

    அரசுப் பேருந்துகளை எதுவுமே செய்யாமல் பழுது நீக்கி விட்டதாக கணக்கு காட்டுவதும், பேருந்துக்கு வண்ணம் பூசி விட்டு புதுப்பிக்கப்பட்டு விட்டதாகவும் பொய்க்கணக்கு காட்டும் வழக்கம் தவிர்க்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அதற்காகவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சென்னையில் மொத்தம் 3,233 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பிங்க் நிறத்தில் மட்டும் 1,600 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • பிங்க் நிற பஸ்களில் மட்டுமே பெண்கள் இலவச பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த பஸ்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தது. இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும், நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

    அதன்படி சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் பெண்கள் 'ஒயிட் போர்டு' எனப்படும் சாதாரண பஸ்களில் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். 'ஒயிட் போர்டு' பஸ்களை பெண்கள் கண்டறிவதில் சிரமம் இருந்ததால் அந்த பஸ்களின் முன்புறமும், பின்புறமும் 'பிங்க்' நிற வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் இந்த பஸ்கள் 'பிங்க்' நிற பஸ்கள் என்று அழைக்கப்படுகின்றன.


    சென்னை மாநகரில் தற்போது ஒயிட் போர்டு எனப்படும் பிங்க் நிற பஸ்கள், எக்ஸ்பிரஸ் பஸ்கள், சொகுசு பஸ்கள், குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள், சிற்றுந்துகள் ஆகிய 5 வகைகளில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் மொத்தம் 3,233 மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பிங்க் நிறத்தில் மட்டும் 1,600 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த 1,600 பஸ்களில் மட்டுமே பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் கிராமப்புறங்களில் உள்ள நகர பஸ்களிலும், பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்துக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த, அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழகம் முழுவதும், தினமும் சராசரியாக, 49 லட்சம் பெண்கள் சாதாரண பஸ்களில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இதனால், அரசு பஸ்களில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் எண்ணிக்கை 62 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் பிங்க் நிற பஸ்களில் மட்டுமே பெண்கள் இலவச பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த பஸ்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. எனவே இந்த இலவச பயண திட்டத்தை மற்ற பஸ்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை உள்ளிட்ட நகரங்களில் 'ஒயிட் போர்டு' எனப்படும் சாதாரண பஸ்களில் மட்டுமே பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி மாணவ-மாணவிகளும் இந்த பஸ்களில் தான் இலவச பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் இந்த பஸ்களில் பயணம் செய்யும் ஆண்களுக்கும் கட்டணம் குறைவாகவே உள்ளது. இதனால் பெரும்பாலான ஆண்களும் இந்த பஸ்களிலேயே பயணம் செய்ய விரும்புகிறார்கள். இதனால் சென்னையில் இயக்கப்படும் 1,600 சாதாரண பஸ்களிலும் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.


    அதே நேரத்தில் பெண்கள் கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் எக்ஸ்பிரஸ் மற்றும் சொகுசு பஸ்கள் பெரும்பாலும் பயணிகள் நெரிசல் இன்றி காலியாகவே செல்கின்றன. எனவே சாதாரண பஸ்களில் பயணிகளின் நெரிசலை தவிர்க்கும் வகையில் எக்ஸ்பிரஸ் மற்றும் சொகுசு பஸ்களிலும் பெண்கள் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எக்ஸ்பிரஸ் மற்றும் சொகுசு பஸ்களில் பெண்கள் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

    சென்னை பிராட்வே, தாம்பரம், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், திருவான்மியூர், கேளம்பாக்கம், திருவொற்றியூர், பூந்தமல்லி, சோழிங்கநல்லுார் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில், எக்ஸ்பிரஸ் மற்றும் சொகுசு பஸ்களில் பயணிக்கும் பெண்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அந்தந்த பஸ்களில் உள்ள கண்டக்டர்கள் கடந்த 2 நாட்களாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 2 மாதங்கள் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. அதன் பிறகு எக்ஸ்பிரஸ் மற்றும் சொகுசு பஸ்களில் பெண்கள் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்பது கண்டறியப்படும்.

    சாதாரண பஸ்களில் எத்தனை பெண்கள் பயணம் செய்கிறார்கள் என்பதை இலவச டிக்கெட் மூலம் கணக்கெடுத்து விட்டோம். எக்ஸ்பிரஸ் மற்றும் சொகுசு பஸ்களில் கணக்கெடுப்பு பணி முடிந்ததும் இன்னும் 6 மாதங்களுக்குள் எக்ஸ்பிரஸ் மற்றும் சொகுசு பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமலுக்கு வருகிறது. அதன்பிறகு சாதாரண பஸ்களில் பயணிகளின் நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் நகர பேருந்தின் நாற்காலியுடன் நடத்துனர் சாலையில் கீழே விழுந்தார்.
    • 20,000 அரசு பேருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் - தலைமை செயலாளர்

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரசு பேருந்துகள் சேதமடைவது தொடர்பான புகார்கள் எழுந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் நகர பேருந்தின் நாற்காலியுடன் நடத்துனர் சாலையில் கீழே விழுந்தார். இதே போன்று விருதுநகரிலும் பேருந்தில் சேதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானது.

    இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பேருந்துகள் எவ்வாறு இயங்குகிறது என்பது தொடர்பாக நேற்று தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு போக்குவரத்துக்கு துறையானது ஒரு விரிவான உத்தரவை அனைத்து போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கும் வழங்கியுள்ளது.

    அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தமிழகத்தில் விரைவு போக்குவரத்து கீழ் இயங்கப்படும் விரைவு பேருந்துகள் மற்றும் அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கப்படும் வெளியூர் பேருந்துகள் சென்னையில் இயங்கப்படும் மாநகர பேருந்து உள்ளிட்ட 20,000 பேருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆய்வு செய்த பின்பு அந்த பேருந்தில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை உடனடியாக கண்டறிந்து அவற்றை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சீரமைக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சார ரெயில்கள் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • தாம்பரம் முதல் கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வேயின் பராமரிப்பு பணிகள் நாளை (25-ந்தேதி) நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தாம்பரம் முதல் கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    • நிறைவேற்றப்படாமல் இருந்த 70% பணிகளை 28 மாதங்களில் முடிக்கப்பட்டது.
    • நாள்தோறும் 1 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

    வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து முனையம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு கூறியிருப்பதாவது:-

    புதிய பேருந்து முனையம் திறப்பு, தமிழக மக்களுக்கு தை திங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.


    நிறைவேற்றப்படாமல் இருந்த 70% பணிகள் 28 மாதங்களில் முடிக்கப்பட்டது.

    ரூ.90 கோடி அளவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

    ரூ.13 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.


    தினந்தோறும் 2,130 பேருந்துகளை இயக்கும் அளவுக்கு வழிவகை  ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நாள்தோறும் 1 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் தொடங்குவதற்கான பணியும் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.



    • அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தால் ஆம்னி பஸ்கள் அங்கிருந்து இயக்கலாம்.
    • கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்கள் புறப்பட்டு செல்லும்.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகரப் பகுதியில் உள்ள பஸ் நிலையங்கள் புறநகர் பகுதிக்கு மாற்றப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையம் இன்று திறக்கப்பட்டது. இந்த பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

    சென்னை கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 1200 பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகிறது. அதில் தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பஸ்கள் இனிமேல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி 850 ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். அதேபோல தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நகருக்குள் வராமல் கிளாம்பாக்கத்தோடு நின்றுவிடும்.

    இதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

    கிளாம்பாக்கத்தில் இன்று புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டாலும் ஒரு சில வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை. அதனால் உடனே ஆம்னிகளை அங்கிருந்து இயக்க இயலாது. அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த பிறகு தான் கிளாம்பாக்கத்தில் இருந்து முழுமையாக பஸ்களை இயக்க முடியும்.

    அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தால் ஆம்னி பஸ்கள் அங்கிருந்து இயக்கலாம். அதுவரையில் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்கள் புறப்பட்டு செல்லும்.

    கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு செல்லும் பஸ்கள் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு போகும். அதே போல தென் மாவட்ட பகுதியில் இருந்து வரும் பஸ்கள் கிளாம்பாக்கம் வந்து பின்னர் அங்கிருந்து கோயம்பேடு நிலையத்திற்கு வந்து சேரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கம்.
    • பேருந்து நிலையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    வண்டலூர்:

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

    வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருந்து முனையத்தை பார்வையிட்டார்.

    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக படுக்கைகளுடன் கூடிய ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    • கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கம்.

    வண்டலூர்:

    வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு 2,300 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஜனவரி 1-ந்தேதி முதல் தென்மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகள் இயக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


    பொங்கலுக்கும் கிளாம்பாக்கத்தில் இருந்தே தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே செல்லும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • செய்துங்கநல்லூரில் சோதனை சாவடி அமைத்து வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
    • மழை பாதித்த 4 மாவட்டங்களுக்கு தினசரி 300 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 84.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை காரணமாக திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையேயான சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் செய்துங்கநல்லூரில் சோதனை சாவடி அமைத்து வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், கனமழை காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டாம் என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

    மழை, வெள்ள பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கினால் பாதுகாப்பு இல்லை என்பதால் இம்முடிவு எனவும் தெரிவித்துள்ளது.

    மழை பாதித்த 4 மாவட்டங்களுக்கு தினசரி 300 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • கனமழையின் காரணமாக திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையேயான சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் இருந்து 4 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

    சென்னை:

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    கனமழை பெய்துவருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையேயான சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் செய்துங்கநல்லூரில் சோதனை சாவடி அமைத்து வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சென்னையில் இருந்து 4 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

    இதையடுத்து சென்னையில் இருந்து தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    • தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • பேருந்தின் முதல் பயணமாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும்போது பெரிய புன்னகைகள் பூக்கின்றன!

    மாற்றுத் திறனாளி மாணவர்களைத் திரையரங்கம் - மெட்ரோ ரெயில் பயணம் - விமானப் பயணம் அழைத்துச் சென்றோம்.

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் வாங்கப்பட்ட புதிய வால்வோ பேருந்துகளில் முதல் பயணம் அவர்களுக்கான மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றேன்.

    இன்று துவக்கி வைத்த இந்தப் பயணத்தில்தான் எத்தனை புன்னகைகள்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னதாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பேருந்தின் முதல் பயணமாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

    • பவுர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது.
    • கோயம்பேடு, தாம்பரத்தில் இருந்து பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.

    சென்னை:

    மிலாடி நபி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து காந்தி ஜெயந்தி என தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் வருவதால் வெளியூர் பயணம் அதிகரித்து உள்ளது.

    சென்னையில் இருந்து வெளியூர் செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடர் விடுமுறையால் அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் அரசு பஸ்களை நோக்கி மக்கள் படையெடுத்தனர்.

    அரசு விரைவு பஸ்கள் மற்றும் மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம், கும்பகோணம், சேலம் போக்குவரத்து கழகங்களின் பஸ்களில் 25 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். நேற்று மாலையில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரித்தது.

    நள்ளிரவு 1 மணி வரை வெளியூர் சென்ற மக்களுக்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ்களை ஏற்பாடு செய்தனர். முன் பதிவு இல்லாமல் 1 லட்சம் பேர் அரசு பஸ்களில் மட்டும் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு அரசு பஸ்கள் மூலம் சென்றுள்ளனர்.

    பவுர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது. கோயம்பேடு, தாம்பரத்தில் இருந்து பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன.

    மேலும் வருகிற சனி, ஞாயிறு, திங்கட்கிழமை 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் கோயம்பேட்டில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    தென்மாவட்ட ரெயில்களில் இடங்கள் இல்லாததால் அரசு பஸ்களில் மக்கள் பயணம் செய்வார்கள் என்பதால் தேவையான அளவு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகங்கள் தயாராக உள்ளன. நாளை பயணம் செய்ய 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஆம்னி பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நாளைய பயணத்திற்கு நிரம்பிவிட்டன.

    ×